சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.13 திருத்துறையூர்
பண் - தக்கராகம்
மலையார் அருவித் திரள்மா மணியுந்திக்
குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
கலையார் அல்குற்கன் னியராடுந் துறையூர்த்
தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
1
மத்தம் மதயானை யின்வெண் மருப்புந்தி
முத்தங் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
2
கந்தங் கமழ்கா ரகில்சந் தனமுந்திச்
செந்தண் புனல்வந் திழிபெண்ணை வடபால்
மந்தி பலமா நடமாடுந் துறையூர்
எந்தாய் உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
3
அரும்பார்ந் தனமல் லிகைசண் பகஞ்சாடிச்
சுரும்பாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கரும்பார் மொழிக்கன் னியராடுந் துறையூர்
விரும்பா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
4
பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மாடார்ந் தனமாளி கைசூழந் துறையூர்
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
5
மட்டார் மலர்க்கொன் றையும்வன்னி யுஞ்சாடி
மொட்டாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
கொட்டாட் டொடுபாட் டொலியோவாத் துறையூர்ச்
சிட்டா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
6
மாதார் மயிற்பீலி யும்வெண் ணுரையுந்தித்
தாதாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
போதார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூர்
நாதா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
7
கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச்
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர்
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
8
விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர்
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
9
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவா அவர்தேடித் திரிந்தல மந்தார்
பூவார்ந் தனபொய்கை கள்சூழுந் துறையூழ்த்
தேவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
10
செய்யார் கமல மலர்நாவ லூர்மன்னன்
கையாற் றொழுதேத்தப் படுந்துறை யூர்மேற்
பொய்யாத் தமிழூரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவநெறி தானே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com